அக்டோபர் 7-ஆம் தேதி பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்ட தினம் அனுசரிப்பு
இளைய தலைமுறையினரிடையே நீர்மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் 07.10.1961 அன்று பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 7-ஆம் தேதி பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, பொள்ளாச்சி நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரங்கில், முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் திரு. க. காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.கே. பழனிசாமி கவுண்டர், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் பாரத ரத்னா திரு. சி. சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தொழிலதிபர் திரு. பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
07.10.2026 அன்று காலை 10.00 மணிக்கு, மாண்புமிகு அமைச்சர்கள் மருத்துவர் கோ.க. அருண்ராஜ், திரு. வே. சம்பத்குமார் மற்றும் திரு. க. விக்னேஷ் ஆகியோர் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்த உள்ளனர். மேலும், ஆழியார் அணையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல். ராவ் அவர்களின் திருவுருவச் சிலைக்கு வால்பாறை வட்டாட்சியர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாசன சங்கப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.