கிணத்துக்கடவு வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மெகா முகாம் – 23.10.2026 அன்று நடைபெறுகிறது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து 25 இடங்களில் சிறப்பு மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இம்முகாம்களில் மருத்துவப் பரிசோதனை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், தனித்துவ அடையாள அட்டை (UDID) பதிவு மற்றும் புதுப்பித்தல், உதவி உபகரணங்கள் வழங்குதல், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, பேருந்து பயண அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 23.10.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கிணத்துக்கடவு வட்டாரம், வடபுதூரில் உள்ள எஸ்.வி. மகாலில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கிணத்துக்கடவு வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.