ஊரகப் பெண்கள் மற்றும் திருநர்களுக்கு 100% மானியத்தில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், தகுதியான பெண்கள் மற்றும் திருநர்களுக்கு 100% மானியத்தில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.50,000 மதிப்பிலான கறவை மாடு, இரண்டு ஆண்டுகளுக்கான காப்பீடு, போக்குவரத்துச் செலவு மற்றும் உடனடி தீவனச் செலவிற்காக ரூ.3,000 வழங்கப்படும். 18 முதல் 60 வயதுக்குட்பட்ட, கறவை மாடு வளர்ப்பதற்கு போதிய இடவசதி மற்றும் தீவன வசதி கொண்ட பெண்கள் மற்றும் திருநர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதியானவர்கள் 27.11.2026 முதல் 17.12.2026 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் கோயம்புத்தூர் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் உள்ள துணை இயக்குநர் அலுவலகம் அல்லது வேட்டைக்காரன்புதூர் கால்நடை மருத்துவமனையை அணுகலாம்.

(PDF 90KB)