கோயம்புத்தூர் மாவட்டத்தில் 29.11.2026 அன்று 1,067 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 12.11.2026 அன்று வெளியிடப்பட்டு, புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் 11.12.2026 வரை பெறப்படுகின்றன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12.11.2026 முதல் 22.11.2026 வரை மொத்தம் 17,819 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 21.11.2026 மற்றும் 22.11.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 13,600 விண்ணப்பங்களும், இணையவழி மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் 4,219 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வசதிக்காக, எதிர்வரும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 1,067 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் படிவம் 6 மூலமாகவும், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 மூலமாகவும், விவரங்களைத் திருத்தம் செய்ய படிவம் 8 மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும் விவரங்கள் சரியாக இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். (PDF 402KB)