கோயம்புத்தூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அறிவிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2026

கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 17.11.2026 அன்று கோழிப்பண்ணையாளர்களுக்கு நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

18.11.2026 அன்று சித்தாபுதூர், B.K.R. நகர், சங்கனூர் நீரோடை அருகே 14 நீர்வாழ் குளத்துக் கொக்குகள் இறந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறந்த இரண்டு பறவைகளின் மாதிரிகள் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறிதலுக்காக 19.11.2026 அன்று ICAR-NIHSAD, போபாலுக்கு அனுப்பப்பட்டன. அதில் ஒரு மாதிரியில் H5N1 நோய்த்தொற்று இருப்பது 25.11.2026 அன்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைந்து உயிரிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, வனப்பறவைகளின் இறப்பு குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் கால்நடை உதவி மருத்துவர்கள் கோழிப்பண்ணைகளை நேரில் ஆய்வு செய்யவும், கோழிகளில் அசாதாரண இறப்பு அல்லது நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீர்நிலைகளில் வலசை வரும் பறவைகளின் உடல்நிலையும் தினசரி கண்காணிக்கப்படுகிறது. இந்திய அரசின் 2026-ஆம் ஆண்டு வழிகாட்டுதலின்படி, நோய்த்தொற்று வனப்பறவைகளில் ஏற்பட்டுள்ளதால் மற்ற பறவைகளை அழிக்கும் (Culling) நடவடிக்கை அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (PDF 421KB)