சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் இணையதளப் பதிவேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற விவரங்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
சீர்மரபினர் நல வாரியத்தின் மூலம் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 2008ஆம் ஆண்டு முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் விபத்து நிவாரண உதவித்தொகையாக ரூ.1,25,000 வரை, இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.30,000, ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000, கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 முதல் ரூ.8,000 வரை, திருமண உதவித்தொகையாக ரூ.3,000 அல்லது ரூ.5,000, மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6,000, மூக்குக் கண்ணாடி செலவின ஈட்டுத்தொகையாக ரூ.750 மற்றும் முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ.1,200 வழங்கப்பட்டு வருகின்றன.
சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த, 18 வயது முதல் 60 வயது நிறைவடையாத, அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தகுதியுடைய நபர்கள் இந்நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.
நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைப்பேசி எண் ஆகிய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.