தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான குலுக்கல் நிகழ்ச்சி 04.12.2026 அன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதிப் பிரிவு மற்றும் சிறப்புத் திட்டக் கோட்டம்–III அலுவலகத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கணபதி பாக்கெட்–I, II மற்றும் III, சிங்காநல்லூர் 32 MIG அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் மனை மேம்பாட்டுத் திட்டம் நிலை–1 மற்றும் நிலை–2 ஆகியவற்றில் உள்ள 339 குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதற்காக 21.08.2026 முதல் 04.10.2026 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குலுக்கல் நிகழ்ச்சி 04.12.2026 அன்று காலை 10.30 மணிக்கு, சிங்காநல்லூர், செல்லாண்டியம்மன் நகர், திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது. குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.