தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை 08.11.2026 அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளைத் தவிர) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விரும்புவோர் 18.10.2026க்குள் இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள், கடையின் வரைபடம், சொத்து வரி ரசீது, கட்டிட உரிமையாளரின் சம்மதக் கடிதம், ரூ.700/- உரிமக் கட்டணத்திற்கான E-Challan ரசீது, புகைப்படம், PAN, ஆதார் மற்றும் குடும்ப அட்டை/ஸ்மார்ட் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பட்டாசுக் கடைகள் 9 முதல் 25 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் அமைந்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள், உயர் மின்னழுத்த மின்கம்பிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள பகுதிகளுக்கு அருகில் கடைகள் அமைக்கக் கூடாது. கடைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கட்டிடத்தில் இரண்டு அவசரகால வெளியேறும் வழிகள் இருக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 01.11.2026 முதல் தற்காலிக பட்டாசு உரிமங்கள் வழங்கப்படும். காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.