காரமடை வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – செப்டம்பர் 25
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து 25 இடங்களில் சிறப்பு மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இம்முகாம்களில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கான பயனாளிகளைத் தேர்வு செய்தல், உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் உதவி, பேருந்து அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
மேலும், ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தம், குடும்ப அட்டையில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, 25.09.2026 அன்று காரமடை வட்டம், சிக்காரம்பாளையம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காரமடை வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் இம்முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.