கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் முகாம் 26.10.2026 முதல் 31.10.2026 வரை நடைபெறுகிறது
வைட்டமின் – “ஏ” என்பது உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். இது ஆரோக்கியமான கண் பார்வையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், தோல், திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் இச்சத்து அவசியமாகிறது.
வைட்டமின் “ஏ” குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண்படலத்தில் முக்கோண வடிவில் வெண்ணிறமாகத் தடித்துக் காணப்படும் புள்ளிகள் (Bitot’s spots) மற்றும் மாலைக்கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை, 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் முகாம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், 26.10.2026 முதல் 31.10.2026 வரை, புதன்கிழமை தவிர்த்து, நடைபெற உள்ளது.
இம்முகாம் மாவட்டத்தில், உள்ள 90 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 530 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 1,697 அங்கன்வாடி மையங்களில் இலவசமாக நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுச் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 728 களப்பணியாளர்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறையைச் சேர்ந்த 1,452 களப்பணியாளர்களும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இம்முகாமின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 2,54,850 குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இம்முகாமில் வைட்டமின் “ஏ” திரவம் வழங்கி, குழந்தைகளின் கண் பார்வையைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பாலுசாமி அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.