Close

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

வெளியிடப்பட்ட தேதி : 01/10/2026

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பையும், வனச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 30.09.2026 அன்று மாவட்ட அளவிலான இணையவழி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதையொட்டி, பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன:

  • பெருமாள்முடி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாங்கரை சோதனைச் சாவடி வழியாகவும், மேல்முடி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் பாலமலை அடிவார சோதனைச் சாவடி வழியாகவும் மட்டுமே செல்ல வேண்டும். தடாகம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பக்தர்கள் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவர். தரிசனம் முடித்தவர்கள் மாலை 4.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிக்கு திரும்ப வேண்டும்.
  • பெருமாள்முடி கோவிலுக்கு அதிகபட்சம் 1,000 பக்தர்கள் மற்றும் 250 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • மேல்முடி கோவிலுக்கு அதிகபட்சம் 500 பக்தர்கள் மற்றும் 150 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • வனப்பகுதியை சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஒரு நபருக்கு ரூ.15 பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்படும்.
  • சுகாதாரத்துறையினரால் உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பையும், வனப்பகுதியின் இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பையும் உறுதி செய்ய பொதுமக்களும் பக்தர்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

(PDF 136KB)